எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு -குறள் எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே -பாரதிதாசன் _____________________
நாடும் ஆட்சியும் நாட்சியமாகும், நாட்டையும் ஆட்சியையும் கடந்து ஒருங்கும் தமிழ் நாட்சியம், தமிழர் ஒற்றுமை உணர்வின் சாட்சியமாகும். யார் தமிழன், யார் தமிழர் என்போர் கேளீர்! தானறிந்த முன்னோர் வரை தமிழ் தாய்க்கும் தமிழ் தந்தைக்கும் பிறந்தவனெலாம் தமிழன் ஆவான் - எனினும் தமிழ் முழங்கி தமிழ் பழிக்காமல் தம்மைத் தமிழர் என கருதும் தமிழகம் சார்ந்து வாழும் மக்களெல்லாம் தமிழர் என்போம். தமிழன் என்பது ஒருமை. அது பிறப்பால் அமையும் பொருமை தமிழர் அதன் பன்மை. அது பன்மைத்துவம் கொண்ட பன்மை. தமிழன் என்பது பிறப்பால் அமையும் அடையாளம் என்றால் தமிழர் என்பது உணர்வால் அடையும் நாட்சிய அடையாளம் மாந்தரையெல்லாம் உறவினராக்கும் யாவரும் கேளிர் எனும் மானுடம் போற்றும் தமிழ் மெய்யியலே தமிழ் நாட்சியக் கோட்பாட்டின் அடிப்படையாகும்.
___________________
>>>முன்னுரை
_______________________
முகவுரை
யார் தமிழன்? யார் தமிழன் என்பதற்கு என்ன வரையுரை உள்ளது?
இந்த கேள்விதான் தமிழ் தேசியக் கருத்தியலை தகர்த்து அதை விளிம்பு நிலையிலேயே வைத்திருக்கும் பேராயுதமாக இன்று விளங்குகிறது.
தமிழ் இன உணர்வாளர்களிடம் யாரெல்லாம் தமிழன் என்று வரையறுப்பதில் ஒருமித்த கருத்தில்லாமையால் தமிழ் தேசியக் கருத்தியலால் வெகுமக்களை கவர இயலவில்லை என்பதே இன்றைய நிலை.
யார் தமிழன் எனும் கேள்வி ஒரு சிக்கலான கேள்வி. அந்த கேள்விக்கான பதிலை கூற முற்படும்போது ஒவ்வொரு தமிழ் உணர்வாளரும் தங்களது கோணத்தில் அதை அணுகி வெவ்வேறு நிலைப்பாடு எடுப்பதால் தமிழின வெகுமக்கள் குழப்பமடைந்து எந்த ஒரு விளக்கத்தையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த குழப்பங்களை நீக்கி தமிழர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாடு எடுத்து ஒரே குரலாய் ஒலித்து இக்கேள்வியை எதிர்கொண்டு ஒன்றுபட வேண்டும் என்பதே இத்தொகுப்பின் நோக்கம்.
யார் தமிழன் எனும் கேள்வி எதனால் சிக்கலானது என்றால் அது ஒற்றை வரியில் விடைகாணக்கூடியக் கேள்வி அல்ல. அதற்கு விடைகாண்பதற்கு முன் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கருத்துகளில் தெளிவு பெற வேண்டும்.
முதலில் ‘தமிழன்‘ என்பது இன அடையாளமா அல்லது தேசிய அடையாளமா எனும் கேள்வியில் தெளிவு வேண்டும் அல்லது ஒரு நிலைபாடு எடுக்க வேண்டும்.
அடிப்படையில் ‘தமிழன்’ என்பது ஒரு இனத்தைக் குறிக்கும் இன அடையாளமே.
இருப்பினும், தமிழ் இனம் ஒரு தேசிய இனமாக தகுதி பெற்ற ஒரு இனமாக பல்லாயிரம் ஆண்டுகளாகத் திகழ்கிறது.
‘தமிழன்’ எனும் அடையாளத்தை இன அடையாளமாகக் கொள்ள வேண்டுமா அல்லது தேசிய அடையாளமாகக் கொள்ள வேண்டுமா என்பதை இத்தொகுப்பு தெளிவுபடுத்தும். விரிவாக... உலகின் பல தேசிய அடையாளங்கள் பெரும்பாலும் ஒற்றை ஆட்சியின் விளைவால் அமைந்தது. ஆனால் தமிழகம் பெரும்பாலும் ஒற்றை ஆட்சியின் கீழிருந்ததில்லை. தமிழகம் பெரும்பாலும் சேர சோழ பாண்டியர்களான மூன்று முடிமன்னர்களால் மூன்று இறையாண்மையுள்ள அரசுகளாக ஆளப்பட்டது. ஆட்சியாலும் நிலப்பரப்பாலும் பிரிந்திருந்தாலும் அதை கடந்த ஒரு பொது அடையாள உணர்வு அனைத்து தமிழர்களிடமும் வெளிப்பட்டதென்பது சங்க இலக்கியத்தில் மிகத் துல்லியமாக பதிவாகியுள்ளது. இந்த பொது அடையாள உணர்வு ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. ஆட்சி, எல்லை ஆகியவற்றை கடந்த ஒரு ஒற்றுமையுணர்வு தமிழர்களிடம் இருந்தது. இந்த உணர்வை தேசியம் எனும் சொல்லிற்குள் அடக்க இயலாது. ஏனென்றால் இன்று தேசம் என்பது குடியுரிமையும், இறையாண்மையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. தேசக் கருத்தியலை கொண்டதே தேசியம் எனும் சொல். மேலும் தேசியம் எனும் சொல் வடமொழிச் சொல்லின் தழுவல் என்று கருதப்படுகிறது. இன்று தமிழ் நாடு இந்திய தேசத்தில் உள்ளது. அதனால் இந்திய தேசியம்தான் இங்கு அதிகாரபூர்வமான தேசியம். அது மட்டுமல்லாமல் தமிழன் உலகின் பல நாடுகளில் குடிமனாக வாழ்கிறான். நாம் அனைவரும் குடியுரிமையுள்ள நாட்டிற்கு தேசப்பற்றுடன் இருக்க கடமைப் பட்டுள்ளோம். அதனால் தேசியம் எனும் சொல்லை தமிழினத்திற்கு பயன்படுத்துவது நெருடலானது என பலர் கருதவதால், அதை தவிர்த்து வருகிறார்கள். மாற்று தேசியம் ஓரளவுக்கு மேல் வளராது. ‘தேசியம்‘ எனும் சொல்லை குடியுரிமை உள்ள நாட்டிற்கு விட்டுவிட்டு , எந்தவிதமான சட்டசிக்கலையோ, நெருடலையோ ஏற்படுத்தாத, குடியுறிமைக்கும், இறையாண்மைக்கும் அப்பாற்பட்டு உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் ‘தேசியம்‘ எனும் சொல்லுக்கு இணையான அதற்கு மாற்றாக ஒரு புதிய சொல்லிற்கான தேவை எழந்துள்ளது. அதற்கு ‘நாட்சியம்‘ எனும் சொல்லாக்கத்தை இத்தளம் முன்வைக்கிறது. நாடு, ஆட்சி => நாட்சி => நாட்சியம் ‘தமிழன்‘ என்பது இன அடையாளம் – அது பிறப்பால் அமைவது ‘தமிழர்‘ என்பது நாட்சிய அடையாளம் என்று கொள்வாம் – அது தமிழ் பண்பாட்டை ஏற்று அதன்படி வாழ்ந்து சிறப்பு சேர்ப்பதால் அமையும் அடையாளம் ‘தமிழர்’ எனும் சொல்லை ஏன் நாட்சிய (புரிதலுக்காக தேசிய அடையாளம் என்று கொள்க) அடையாளமாகக் கொள்ள வேண்டும் என்பதை இத்தொகுப்பு விளக்குகிறது. தேசியத்தின் விழுமியங்களில் ஒன்று இனப்பாகுபாடு பார்க்காமல் பிற இன மக்களையும் அறவணைத்து ஏற்பது. தமிழ் நாட்சியமும் அப்படியே. ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்‘ எனும் பெருமைக்குரியவர்கள் நாம். ‘தமிழன்‘ என்பது தமிழ் மொழி இன அடையாளம். அது பிறப்பால் அமைவது. தாயும் தந்தையும் தமிழன் என்றால் அவன் தமிழன். ‘யார் தமிழன்‘ எனும் வரையுரை மூலம் யாரெல்லாம் தமிழனாக கருதப்பட வேண்டும் என்று இத்தளத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழன் எனும் மொழியின அடையாளத்தை யாருக்கும் வழங்கவோ, பங்குகொள்ளவோ இயலாது. ‘தமிழர்‘ என்பது நாட்சிய அடையாளம். அது உணர்வுபூர்வமானது. தமிழகத்தில் தமிழில் பேசி வாழும் பிற இனத்தவரும் தங்களது உணர்வால், விருப்பத்தால், செயல்பாட்டால், தமிழர் என அடையாளப்படுத்தப் படுவர். அதற்கான வரையுரையை இத்தளம் தமிழ் பெருங்குடிமக்கள் முன் வைக்கிறது. ‘தமிழன்‘ எனும் மொழியின அடையாளத்திற்கும் ‘தமிழர்‘ எனும் நாட்சிய அடையாளத்திற்கும் மிக சிறிய வேறுபாடான ஒருமையும் பன்மையுமே இத்தளம் பரிந்துரைக்கிறது. உணர்வால் ஒன்றுபட்ட மாந்தருள் இன வேறுபாடு என்பது மிகச் சிறியதே என்பதை உணர்த்துவதே அதன் நோக்கம். பன்மையாக ஒன்றுகூடும்போது பன்மைத்துவத்தையும் உள்ளடக்குவது மனிதம் போற்றிய தமிழினத்திற்கு மாண்பு கூட்டும். யார் தமிழன் என்பதை வரையறுப்பதில் குடியை (சாதி) முன்னிருத்த கூடாது. குடி (சாதி) அடையாளம் தமிழருள் பிளவு ஏற்படுத்த வல்லது. பன்னெடுங்காலமாக குடி (சாதி) சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தி வந்ததன் விளைவாக குடிகளின் இடையே காழ்ப்புணர்ச்சி உள்ளது. யார் தமிழன் என்பதை வரையறுக்கும் வரையுரையிலேயே குடியோ (சாதி) அதன் பட்டியலோ இருந்தால் அது தமிழன் எனும் அடையாளத்திற்குள் குடி அடையாளத்தையும் அங்கீகரித்ததுபோல் ஆகும். அதனால் தமிழினம் ஒன்றுபட வாய்ப்பில்லாமல் போகும். திராவிடன் எனும் சொல்லில் பல பொருள் இருந்தாலும் இத்தொகுப்பு திராவிடன் என்பதை ஒரு மரபினமாக மட்டுமே பார்க்கிறது. அது ஆரிய மரபினத்திலிருந்து வேறுபட்ட இந்தியாவின் ஆதிக்குடி மக்களின் மரபின அடையாளம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட உள்ள திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் திராவிட மரபினத்தை சேர்ந்தவர்கள். திராவிட இனத்தைப் பற்றியும் இத்தொகுப்பு விவரிக்கிறது. திராவிட மொழிகள் அனைத்தும் தமிழிலிருந்து திரிந்து உருவாகியது என்பது தமிழர்களின் கருத்து. அதனால் பிற திராவிட மொழி பேசும் மக்கள் ஆதியில் தமிழர்களாக இருந்தார்கள் என்பதும் தமிழர்களின் கருத்து. இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் வாழும் பிற திராவிட மொழியின மக்கள் தங்களைத் ‘தமிழராக‘ (நாட்சிய அடையாளம்) அடையாளப்படுத்திக் கொள்ளவது மிக இயல்பானது, உண்மையானதும் கூட. அப்படி பிற திராவிட மொழியினத்தில் தமிழகத்தில் பிறந்து தங்களை ‘தமிழர்களாக‘ அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தமிழ் மொழியினத்தில் பிறந்த தமிழனைப் போல் உண்மையாக தமிழ் மொழியைப் பாதுகாப்பதிலும் தமிழின உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஈழ விடுதலையில் எடுத்த நிலைப்பாட்டிலும் அவர்களின் செயல்பாட்டால் கண்டுள்ளோம். தமிழகத்தில் பிறந்து வாழ்வதன் மூலம் ‘தமிழர்‘ எனும் நாட்சிய அடையாளத்தினுள் ஊடுருவி தமிழை சிதைப்பதிலும், தமிழர் பெருமிதங்களை சிறுமைப்படுத்துவதிலும், மத அடையாளம் போன்ற மாற்று அடையாளங்களை முன்னிலைப்படுத்தி தமிழர் ஒற்றுமையை குலைப்பதிலும் ஈடுபடும் பிற இனத்தவர்களை ‘தமிழர்‘ எனும் நாட்சிய அடையாளத்தால் அடையாளப்படுத்த முடியாதபடி இத்தளத்தில் உள்ள ‘யார் தமிழர்‘ எனும் வரையுரை பாதுகாக்கும். தமிழன் எனும் மொழியன அடையாளத்தை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து தங்களின் முன்னோர்களிடமிருந்து பெற்ற மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, பெருமிதங்கள், வரலாற்று சிறப்புகள், வெற்றி தோல்விகளால் ஏற்பட்ட ஏற்ற இரக்கங்கள் போன்றவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதை இலக்காக கொள்ள வேண்டும். தமிழ் வளர்ச்சி என்கிற பெயரில் தமிழை சிதைத்து விடாமல் பாதுகாக்க எவற்றை எல்லாம் தமிழ் வளர்ச்சியாகக் கொள்ள வேண்டும் என இத்தளம் ஓரளவுக்குப் பட்டியலிட்டுள்ளது. தமிழின் ஒலிக் கட்டமைப்பை சிதைத்து தமிழுக்கு பொருந்தாத வடமொழி ஒலிகளை உட்புகுத்ததி தமிழை அழிக்க தமிழனையே பயன்படுத்தும் கட்டமைக்கப்பட்ட சதியைப் பற்றி இத்தொகுப்பிலுள்ள ஒலிக் கட்டமைப்பு எனும் பக்கம் விவரிக்கிறது. தமிழனுடன் இசைந்து ‘தமிழராக‘ வாழும் பிற இன மக்களையும் சேர்த்து நல்லிணக்கத்துடன் ‘தமிழர்‘ எனும் நாட்சிய அடையாளத்தை அனைத்திற்கும் மேலாக உயர்த்தி பிடித்து ‘தமிழ் நாட்சியத்தை‘ தொய்வின்றி காப்போம். ...சுருக்க
___________________________
பொருளுரை
தமிழ் தேசியக் கருத்தியல் பொது மக்களிடம் சென்றடைந்து ஒரு மக்கள் இயக்கமாக மாறாமல் இன்னும் விளிம்பு நிலையிலேயே இரருப்பதற்கு காரணம் என்ன?
தமிழ் தேசியக் கருத்தியல் நம் நாடு விடுதலை பெருவதற்கு முன்னரே முன்னெடுக்கப்பட்ட ஒரு கருத்தியல். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கம் இந்திய தேசியக் கருத்தியலை அடிப்படையாக கொண்டு போராடியது. அப்பொழுது பொது எதிரியான ஆங்கிலேயரை விரட்டுவதற்கு ஒன்றுபட்டு போராடவேண்டியத் தேவை இருந்ததால் இந்திய தேசியக் கருத்தியல் அளவுக்கு தமிழ் தேசியம் அப்பொழுது பொது மக்களிடம் சென்றடையவில்லை. அதே காலகட்டத்தில் வடஇந்திய ஆதிக்கத்திலிருந்து நம்மைக் காப்பதற்காக திராவிட இயக்கம் போராடிக் கொண்டிருந்ததால் அதன் தாக்கத்தினாலும் தமிழ் தேசிய கருத்தியலை தமிழர்கள் பெரிதாக கொள்ளவில்லை. விடுதலை பெற்று நம் நாடு குடியரசான பிறகு தமிழ் தேசியக் கருத்தியல் இந்திய தேசியத்திற்கு எதிரானக் கருத்தியலாகப் பார்க்கப்பட்டது. அதனால் அது வலுவிழந்து திராவிட இயக்கத்தினுள் கரைந்தது. விரிவாக... இன்று தமிழ்நாடு இந்திய பெருநாட்டின் ஒரு பகுதி. ஈழம் இலங்கையின் பகுதியாக இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் உலகின் பல நாடுகளில் குடிமக்களாக இருக்கிறார்கள். நாம் குடிமகனாக உள்ள நாடு அதிகாரபூர்வமாக அதன் தேசியத்தை முன்வைக்கிறது. ஒரு நாட்டின் குடிமனாக இருந்து கொண்டு அந்த நாடு பரிந்துரைக்கும் தேசியத்திற்கு மாற்றாக அல்லது அதற்கு இணையாக வேறு ஒரு தேசியத்தைப் பற்றி பேசுவது, சிந்திப்பது என்பது இன்று பெருவாரி தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. நாம் குடியுரிமையுடன் வாழும் நாடுகளும் அதை ஆதரிக்காது. அதனால்தான் ‘தமிழ் தேசியம்‘ நெடுங்காலமாக விளிம்பு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. தேசியம் எனும் சொல் தேசம் சார்ந்த புறவாழ்வியலைக் குறிக்கும் சொல் என்பதறிவோம். தேசியம் எனும் சொல் ஒரு தேசம் சார்ந்த பொருளாதாரம், இயற்கை வளங்கள், நிலப்பரப்பு, மக்கள், பண்பாடு, வரலாற்று தொடர்ச்சி மற்றும் இவற்றை எல்லாம் கட்டிக் காக்கும் அரசியல் அதிகாரம் அல்லது அந்த நோக்கம் கொண்ட பொது சிந்தனையை கருத்தியலாக உருவாக்கி, அதற்கு ஒரு குழு அடையாள உணர்வு கொடுக்கும் சொல்லாக விளங்குகிறது. தேசம் எனும் சொல் நாடு எனும் சொல்லிற்கு இணையான சொல். தேசம் எனும் சொல் இறையாண்மையுள்ள நாடுகள் பயன்படுத்தும் சட்டபூர்வமான சொல்லாகவும் விளங்குகிறது. தேசியம் எனும் சொல் இறையாண்மையுள்ள நாடுகள் அதன் குடிமக்களை உணர்வுபூர்வமாக ஒன்றுபட பயன்படுத்தும் சொல்லாக விளங்குகிறது. தேசம் எனும் சொல்லின் மூலச்சொல் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் ‘தேயம்‘ எனும் தமிழ்ச் சொல் என்று கருதுபவர்கள் உண்டு. அது தேஷ் எனும் வடமொழிச் சொல்லின் தழுவல் என்றும் நாடு எனும் சொல்லே அதற்கு இணையான தமிழச்சொல் என்று கருதுபவர்களும் உண்டு. அது தமிழா, வடமொழியா என்னும் ஆய்விற்கு இது தளம் இல்லை என்றாலும் தேசம் அல்லது தேசியம் எனும் சொல்லை உச்சரிக்கும்போது அது ஒரு தனித்தமிழ் சொல் உணர்வை கொடுப்பதில்லை என்பது மட்டும் இங்கு கருத்தில் கொள்ளப்படுகிறது. தமிழ் தேசியம் தமிழரின் தேசியக் கருத்தியல் என்பது யாரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் தமழரின் தேசியக் கருத்தியல் என்றால் யார் தமிழர் என்பதையும் வரையறுத்தாக வேண்டியிருக்கிறது. யாரெல்லாம் தமிழர் என்பதை வரையறுப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது ஒரு சிக்கலான கேள்வி. அதற்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் பல கேள்விகளுக்கு விடை காணவேண்டியிருக்கும் . தமிழ் பேசுபவரெல்லாம் தமிழரா? தமிழ் நாட்டில் நிரந்தர இருப்பிடம் கொண்டு வாழ்பவர் எல்லாம் தமிழரா? பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழும், வீட்டில் தம் சொந்த மொழி பேசும் பிற மொழியின மக்கள் தமிழர்களா? பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழும், வீட்டிலும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசும் பிற மொழியின மக்கள் தமிழர்களா? தமிழுக்காக தமது வாழ்வை அர்பணித்த பிற மொழியின மக்கள் தமிழர்களா? தமிழரின் நலனுக்காக போராடும் பிற மொழியின மக்களை தமிழராக ஏற்க வேண்டுமா? தமிழ் குடியில் பிறந்து பிற நாடுகளுக்கு குடியெயர்ந்தவர்கள் தமிழரா? குடிபெயர்ந்த தமிழரின் தமிழ் பேசத் தெரியாத வாரிசுகள் தமிழரா? தமிழ் குடியில் பிறந்து தமிழர் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் தமிழரா? தமிழ் குடியில் பிறந்து தமிழர் அடையாளத்தை அழிக்க முற்படும் அல்லது சிறுமைப்படுத்தும் அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்பவர் தமிழரா? தமிழரல்லாதவரை திருமணம் செய்தவர்களின் வாரிசுகள் தமிழரா? தமிழிலிருந்து பிறந்த பிற திராவிட மொழியின மக்கள் தமிழகத்தில் குடிபெயர்ந்து பல தலைமுறை கடந்து தங்கள் மொழி மறந்து தமிழ் மட்டுமே பேசி தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் தமிழரா? இது போன்ற கேள்விகளுக்கு விடைகண்டு நாம் ஒரு தெளிவான நிலைப்பாடு கொண்டால்தான் யார் தமிழர் என்பதை வரையறுக்க முடியும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் நாம் விடை காண வேண்டும் என்றால் ஒரு மிகப் பெரிய கேள்வி எழும், அந்த கேள்விக்கு விடை கண்டால்தான் நாம் யார் தமிழர் என்பதை வரையறுக்க முடியும். அந்த கேள்வி என்னவென்றால் ‘தமிழர்‘ என்பது இன அடையாளமா அல்லது அது தேசிய அடையாளமா என்பதே. இன அடையாளம் என்றால் அது பிறப்பால் அமைவது. அதில் பிறர் சேரமுடியாது. தேசிய அடையாளம் இன அடையாளத்தின் நீட்சி. அது ஒரு நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட இனம் அல்லது இனங்கள், அதன் அரசியல், ஆட்சி அதிகாரம், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் தொடர்ச்சியால் ஏற்பட்ட ஒரு அடையாளம். இதில் பிற இனத்தவர் வந்து சேர்வதற்கும் இடம் உண்டு. தமிழர் என்பதை இன அடையாளமாக கொள்ள வேண்டுமானால் அது தனிப்பட்ட ஒரு மரபினம் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். திராவிட மரபினத்தைச் சேர்ந்த பல மொழியினங்களில் ஒன்று ‘தமிழினம்‘ எனும் மொழியினம். மொழியினம் என்பது மரபினத்தின் உட்பிரிவு. . புறத்தோற்றத்தை வைத்தும் மரபணுவியல் கூறாய்வின் மூலமும் ஒரு மரிபினத்தை எளிதில் அடையாளம் காணலாம். ஆனால் புறத்தோற்றத்தை வைத்தும் மரபணுவியல் கூறாய்வின் மூலமும் ஒருவர் எந்த மொழியினம் என்று பிரித்து வகைப்படுத்துவது எளிதல்ல. ஒருவர் பேசும் மொழியை வைத்தே அந்த மரபினத்தினுள் எந்த மொழியினத்தைச் சார்ந்தவன் என்பதை அடையாளம் காண முடியும். தேசிய அடையாளம் என்பதும் இனம் சார்ந்தது என்றாலும் அது இன அடையாளத்தின் நீட்சி. தேசிய அடையாளம் என்பது ஒரு இனத்தின் நலன் பேணும் கருத்தியல் சார்ந்தது. அதில் அந்த மக்களோடு மக்களாக இணைந்து வாழும் பிற இனத்தவரை சேர்ப்பதற்கும் இடமுண்டு. இன அடையாளத்தை பின்னுக்குத் தள்ளி மானுடப் பார்வை கொண்ட ஒரு பண்பட்ட கருத்தியலே தேசியம். தேசியம் ஒரு இனத்தையும் அது வாழும் நிலப்பரப்பையும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது. ஆங்கிலேயர் நம்மை ஆள வருவதற்கு முன்னரே தமழர் என்பது தனிப்பட்ட ஒரு தேசிய இனம் என்பது நாம் அறிந்த ஒன்றே. இன்று தமிழகம் இந்தியாவில் ஒருப் பகுதி. இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களில் தமிழரும் ஒன்று. இதை இந்திய அரசு உட்பட அனைவரும் ஒப்புக் கொள்வர். ஆனால் இந்திய அரசு இந்தியா ஒரே தேசம் என்றும் அதன் குடிமக்கள் அனைவரும் ஒரே தேசிய கருத்தியலால் ஒன்றுபட வேண்டும் என்கிற இலக்கை வைத்து செயல்பட்டு வரும் அமைப்பு. அப்படி இருக்கும்போது அதற்கு மாற்றாகவோ அல்லது இணையாகவோ தமிழ் தேசியம் என்கிற கருத்தியலை முன்வைப்பதால் பெருவாரியான தமிழ் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர் என்பது ஒரு தேசிய இனம் என்றாலும் தமிழருக்கென்று இறையாண்மையுள்ள ஒரு நாடு இல்லை என்பதால் தமிழர் என்பதை ஒரு தேசிய அடையாளம் என்று கூறினால் அது மக்களிடம் எடுபடாது. ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த தமிழ் தேசியம் இறையாண்மையுள்ள ஒரு நாட்டை அடைவதை இலக்காகக் கொண்டது. அவர்களுடைய இறையாண்மை அவர்களுடன் முழுமை பெறக்கூடிய ஒன்று. அவர்களுடைய தேசியமும் அப்படியே. ஒரே தேசிய இனம்தான் என்றாலும் இந்தியத் தமிழன் அதில் பங்கேற்க முடியாது. ஆனால் இந்த தேசியக் கருத்தியலைத் தாண்டிய ஒரு உணர்வு உலகிலுள்ள எல்லாத் தமிழனையும் இணைக்கிறது என்பதை மட்டும் நாம் அறிவோம். அந்த உணர்வு தேசிய உணர்விற்கு மேலான ஒன்று. இந்த உணர்வு இன்று உருவானதல்ல, காலம் காலமாக நம் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. தமிழன் பெரும்பாலும் ஒற்றை ஆட்சியின் கீழ் இருந்ததில்லை. சேர சோழ பாண்டிய மன்னர்கள் இறையாண்முயுடன் தத்தம் நாடுகளை ஆண்டு வந்தார்கள் என்பதே நமது வரலாறு. ஆனால் நாடு, அரசு என்கிற எல்லையைக் கடந்து ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றாக பார்க்கும் பாங்கு பழங்கால தமிழ் இலக்கியம் முழுவதும் நாம் காண்கிறோம். நாடு, அரசு, எல்லை போன்றவற்றை கடந்த அந்த உணர்வு குடிமக்களின் உணர்வு. அந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும் உணர்வு. அதை நாம் தேசியம் அல்லது தேசிய உணர்வு எனும் சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. ஏனென்றால் தேசியம் என்பது ஒரு நாடு சார்ந்த அடையாளம் அல்லது உணர்வு. அதனால் தேசியம் என்ற சொல்லுக்கு மாற்றாக அதற்கு மேலான ஒரு புதிய சொல்லிற்கான தேவை எழுகிறது. அந்தச் சொல் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட பயன்படுத்தக்கூடிய சொல்லாக இருக்க வேண்டும். அந்தச் சொல் எந்த ஒரு நாட்டிற்கோ அரசாங்கத்திற்கோ எதிரானதாக இருக்கக்கூடாது. அந்தச் சொல் எந்தவித சட்டசிக்கலையும் ஏற்படுத்தாத ஒரு சொல்லாக இருக்க வேண்டும். அந்தச் சொல்லை பயன்படுத்துபவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தமுடியாத சொல்லாக இருக்க வேண்டும். உலகத்தில் உள்ள தமிழர் அனைவரும் அவர்கள் இருக்கும் நாட்டிற்கு, பகுதிக்கு ஏற்ப வெவ்வேறு தேசியக் கருத்தியலை ஏற்றாலும் அதைத்தாண்டி அவர்கள் அனைவரும் இணையும் புள்ளிக்கு ஒரு சொல் அமைந்தால் அது உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும். இந்தத் தளம் (தொகுப்பு) ‘நாட்சியம்‘ எனும் புதிய சொல்லைப் புனைந்து அதை தேசியம் எனும் சொல்லுக்கு மேலான ஒரு சொல்லாக உலகத் தமிழ் மக்களின் முன் வைக்கிறது. ‘தமிழர்‘ என்பதை நாட்சிய அடையாளமாகக் கொண்டால் யார் தமிழர் என்பதை வரையறுப்பதில் உள்ள சிக்கல் நீங்கி தெளிவான ஒரு நிலைப்பாடு எடுக்க முடியும். உலகத் தமிழர் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே குரலாய் ஒலிப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமையும். ...சுருக்க
___________________________
தீர்வுரை
தமிழன் எனும் சொல் தமிழின மக்களைக் குறிக்கும் ஒரு இனக்குறியீடு. அது பிறப்பால் அமைவது. அனைத்து துறைகளிலும் தன் சுவடு பதிய வாழ்ந்த பழங்காலத் தமிழனின் குருதிவழி வாரிசு மட்டுமே இங்கு தமிழன் என கொள்க. இன்றுள்ள தமிழன் தொல் தமிழ் நாகரிகத்தின் நிகழ்காலப் . அவர்கள் விட்டுச்சென்ற பெருஞ்சொத்தின் நிகழ்கால உரிமையாளன்.
‘தமிழர்’ எனும் சொல் தமிழனின் குறிக்கும் சொல் என்று மட்டும் இல்லாமல் பலரையும் உள்ளடக்கிய குறிக்கும் குறியீடாகக் கொள்க.
யார் தமிழன் –
முன்னோர்கள் கிளைத்தொடரில் அறியப்பட்ட முன்னோர்கள் வரை உள்ள அனைத்து முன்னோர்களும், அவர்கள் மூலம் தம் மூதாதையர் பற்றி அறிந்திருப்பின் அவர்களும், தமிழை மட்டுமே கொண்டிருந்தவர்களானால் அவன் தமிழன். தாய் வழியிலும் தந்தை வழியிலும் தோன்றிய
தமிழினம் என்பது தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்களின் இனக்குழுமம். தமிழினம் எனும் இனக்குழு ஒரு .
தமிழினம் எனும் மொழியினம் திராவிட இனம் எனும் மரபினத்தின் உட்பிரிவே.
திராவிடன் எனும் மரபின அடையாளத்திற்கு உட்பட்டதே தமிழன் எனும் மொழியின அடையாளம்.
தெலுங்கர், கன்னடர், மலையாளி உட்பட பிற திராவிட மொழியின மக்கள் தமிழனின் தொப்புள் கொடி உறவுகளாகும்.
‘தமிழன்’ எனும் மொழியின அடையாளம் பிறப்பால் அமைவது. தமிழுக்கு அல்லது தமிழனுக்கு தொண்டு செய்வதன் மூலம் ஒருவன் தமிழனாக முடியாது. வேறு தமிழ் தொண்டு புரிந்தவர் ‘தமிழன்’ இல்லை.
பிறந்துநாட்சியம்
‘தேசியம்’ எனும் சொல் ஒரு நாடு தம் குடிமக்களை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்த அதிகாரபூர்வமாக பயன்படுத்தும் சொல்.
நாட்சியம் எனும் சொல்லாக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கடந்த, நாடு எனும் அரசியல் எல்லையையும் கடந்த, ஓர் இனக்குழுவின் ஒருமித்த நீண்ட தொடர்ச்சியால் அமைந்த அடையாளத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
தமிழ் நாட்சியம்
‘தமிழ் தேசியம்’ எனும் சொற்பதம் நீண்ட நாட்களாக புழக்கத்தில் இருந்தாலும் அது இந்திய தேசியம் போன்ற அதிகாரபூர்வமான தேசியக் கருத்தியலின் தாக்கத்தில் உள்ள மக்களிடம் பெரிதாக எடுபட வாய்ப்பில்லாததாகவே தெரிகிறது.
தமிழ் நாட்சியம் எனும் புதிய சொற்பதம் தமிழ் மொழியினமும் அதைச் சார்ந்த மக்களும் அடங்கிய இனக்குழுவின் ஒருமித்த கூட்டு நினைவுணர்வின் நீண்ட நெடுந்தொடர்ச்சியால் அமைந்த அடையாளத்தைக் குறிக்கும் சொற்பதமாகும்.
‘தேசியம்’ எனும் சொல்லை ஒரு நாட்டின் அதிகாரபூர்வமான பயன்பாட்டிற்கு விட்டுவிடுவோம்.
தேசியம் எனும் சொல்லைவிட விரிவான பொருள் கொண்ட ‘நாட்சியம்’ எனும் புதிய தூய தமழ்ச் சொல்லை அதற்கு மாற்றாக பயன்படுத்துவதன் மூலம் உலகத் தமிழர்களை ஒரே கருத்தியலால் ஒன்றுபடுத்த முடியும்.
தமிழ்நாட்சியக் கருத்தியல்
இதுவரை எழுதி வைத்து வரிசைப்படுத்தப்படவில்லை என்றாலும், தமிழுணர்வுள்ள அனைவருக்கும் நாமறிந்த கீழ்காணும் கோட்பாடுகள்தான் உணர்வு மிகுந்த எண்ணோட்டமாக காலம் காலமாக திகழ்ந்து வருகிறது. உலகத் தமிழர்கள் ஒருமிக்கும் அந்த தமிழ் கோட்பாடுகள் யாதெனின்;
அ. தமிழின மக்களும், தமிழ் மண்ணில் தமிழ் பண்பாட்டைத் தழுவி தமிழனோடு இசைந்து வாழும் பிற இன மக்களும் தன்னிறைவோடும் தன்மானத்தோடும் வாழ்ந்து தழைக்க வேண்டும்;
ஆ. உலகமெங்கும் பரந்து கிடக்கும் புலம்பெயர் தமிழினமக்களின் தமிழ் வழி வாழ்வும் தமிழ் அடையாளமும் காக்கப்பட வேண்டும்;
இ. தமிழின மக்கள் வழிவழியாய் ஆண்டு, வாழ்ந்து வந்த தமிழகமாகிய தமிழ் நிலப்பரப்பும், அது கொண்ட நிலம், நீர், மலை, காடு, கடல், விலங்கு, உட்பட அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்;
ஈ. தமிழ் மொழி பயன்பாட்டை முழுமைப்படுத்தி தமிழ் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்;
உ. தொல் தமிழ் நாகரிகக் கருத்தியலுக்கு வலுசேற்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொண்டு அதை மெய்ப்பிக்க வேண்டும்
போன்றவை ஆகும்.
இந்த கோட்பாடுகளை எண்ணோட்டங்களாகக் கொண்ட மக்களின் உணர்வுகளின் இணைப்பால் அமைந்த அடையாளத்தையே ‘தமிழ் நாட்சியம்’ எனக் கொள்வோம்.
‘தமிழ் நாட்சியம்’ ஒரு புதிய சொற்பதம் என்றாலும் அதன் பொருளாகவும் கோட்பாடாகவும் இங்கு கூறப்பட்டிருப்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததும் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒன்றே. பண்டைய காலம் தொட்டே மக்களையும், மண்ணையும் நேசிக்கும் உணர்வால் இணைக்கப்பட்ட சமூகம்தான் தமிழ் சமூகம். மக்களையும், மண்ணையும் நேசிப்பது மனித குலத்திற்கே பொதுவானது என்றாலும் மொழியால் ஒரு தனி இனக்குழுவாகி, மொழி காலம் காலமாய் பதிவு செய்து வைத்த வாழ்வியலும் மெய்யியலும் ஒரு தனி பண்பாட்டை உருவாக்கி அதை பின்பற்றி வாழும் மக்கள் நாடு, ஆட்சியால் பிரிந்திருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டிருந்தார்கள். அந்த உணர்விணைப்பால் அமைந்த அடையாளத்தையே ‘தமிழ் நாட்சியம்’ எனும் சொற்பதம் அதன் பொருளாக பொருளேற்றம் கொள்கிறது.
‘தமிழ் நாட்சியம்‘ ஒற்றை ஆட்சியின் விளைவு அல்ல.
தமிழின மக்கள் பெரும்பாலும் ஒற்றை ஆட்சியின் கீழிருந்ததாக வரலாறு இல்லை. பெரும்பாலும் சேர சோழ பாண்டியர் என மூன்று முடி மன்னர்கள் இறையாண்மையுடன் தத்தம் நாடுகளை ஆண்டு வந்தார்கள் என்பதே நம் வரலாறு. பண்டைய தமிழகத்தில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் மக்கள் தங்களை ஓரினமாக கருதினார்கள் என்பதற்கு பழந்தமிழ் இலக்கியமே சான்று. இதைத்தான் நாம் நாட்சியம் என்கிறோம். தமிழ் நாட்சியம் ஆட்சி, எல்லை கடந்த ஒரு பொது உணர்வு. பழந்தமிழகத்தில் அரசியல் எல்லை கடந்த தமிழ்கூறுநல்லுலகு முழுவதுமாக நாட்சிய உணர்வு இருந்தது.
இன்று அரசியல் எல்லை மட்டுமல்லாமல் புவியியல் எல்லைகளையும் கடந்து தமிழன் கால் பதித்து வாழும் எந்த நாட்டிலும் அந்தந்த நாட்டின் நாட்டுப்பற்று மிகுந்த சிறந்த குடிமகனாக திகழும் தமிழனிடமும் தமிழ் நாட்சிய உணர்வு தழைத்தோங்கி நிற்கிறது. அன்று இலக்கியத்தால் இணைப்புடன் இருந்த தமிழின மக்கள் இன்று இணையத்தால் இணந்து தமிழ் நாட்சிய உணர்வை வலுப்படுத்து வருகிறார்கள். எப்படி பண்டைய தமிழ் புலவர்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பொதுவான படைப்புகளைப் படைத்தார்களோ அப்படி எந்த நாட்டிற்கும் அதன் ஆட்சிக்கும் கட்டுப்பட்டு சிறந்த குடிமகனாய் வாழ்ந்து கொண்டு தமிழ் நாட்சியத்தைப் பற்றி பேசலாம், சிந்திக்கலாம், படைக்கலாம்.
‘தமிழர்’ எனும் நாட்சிய அடையாளம்
இனத்தூய்மை போற்றுவது மனிதத்திற்கு எதிரானது. ஒர் இனத்தைச் சேர்ந்த மக்கள் அதன் பெருமை பற்றியும், அதன் தூய்மையைப் பற்றியும் பேசலாம். ஆனால் ஒரு நாடு அல்லது ஒரு தேசம் இனத்தூய்மை பற்றி பேசுவது இழுக்கு. இனத்தூய்மை பேசி தேசியம் வளர்ப்பது தேசிய விழுமியத்திற்கு புறம்பானது.
தமிழ் நாட்சியம், நாடு எனும் அரசியல் எல்லையை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அதேபோல் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழன் மனிதம் பேணி மனிதகுலத்தில் உள்ள யாவரையும் உறவினனாக கருதினான். தமிழகம் சார்ந்து, தமிழை முதல் மொழியாகக் கொண்டு வாழும் மக்களில் தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை, தமிழ் வரலாற்றுப் பெருமிதங்களைச் சிதைக்கும் வகையில் அல்லது சிறுமைப்படுத்தும் வகையில் தங்கள் மொழியை, தங்கள் பண்பாட்டை, தங்கள் வரலாற்றைப் போற்றாத வரையில் தமிழ் நாட்சியம் தன்னை ‘தமிழர்’ என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் எந்த இன மக்களையும் தம் மக்களாக ஏற்கும்.
யார் தமிழர் –
தமிழகம் சார்ந்து, கொண்டு வாழும் மக்களில், தமிழ் நாட்சியக் கோட்பாட்டிற்கு கொண்டிருக்காமலும், தொல் தமிழ் கருத்தியலுக்கு மாற்று நிலைப்பாடு கொண்டிருக்காமலும், தம் மொழி பேசினாலும் தம் மொழியின அடையாளத்திற்கு மேலாக எனும் நாட்சிய அடையாளத்தை எவரையும், தமிழின மக்களுடன் சேர்த்து .
‘தமிழர்’ என்ற சொல் ‘தமிழன்’ என்ற சொல்லின் பன்மைதான் என்றாலும் பன்மைத்துவத்தையும் உள்ளடக்கிய சொல்லாக பயன்படுத்தும்படி இந்த வரையுரை தமிழ் சமூகத்திடம் வலியுறுத்தி கோருகிறது.
‘தமிழன்’ எனும் மொழியின அடையாளத்தை விட ‘மனிதன்’ என்கிற அடையாளம் மிகப் பெரியது என்பதை உணர்த்தும் வகையில் ‘யாவரும் கேளிர்’ என்கிற நம் முப்பாட்டனின் கூற்றையும் நாம் கோட்பாடாகக் கொண்டுள்ளோம்.
‘தமிழன்’ எனும் மொழியின அடையாளத்தின் நீட்சியே ‘தமிழர்’ எனும் நாட்சிய அடையாளம்.
‘தமிழர்’ எனும் நாட்சிய அடையாளம் தமிழுக்கு, தமிழருக்கு தீங்கிழைக்காமல் தமிழனுடன் தமிழராய் இசைந்து வாழும் பிற இன மக்களையும் அறவணைத்து ஏற்கும். அதனால் தமிழுக்கு, தமிழருக்கு தொண்டு செய்யும் பலரும், தமிழுக்கு, தமிழருக்கு தீங்கிழைக்காமல் தமிழராய் வாழ நினைக்கும் பலரும் ‘தமிழர்’ எனும் அடையாளம் பெறுவர்.
‘தமிழன்’ எனும் மொழியின அடையாளம் தொல் தமிழ் குடியின் மாண்பைக் காக்கும். தமிழருள் ஊடுருவும் பகை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து தமிழையும் தமிழ் அடையாளங்களையும் பாதுகாக்கும்.
நாம், ‘
‘ எனும் இன அடையாளத்தை அதன் நீட்சியான ‘தமிழர்’ எனும் நாட்சிய அடையாளத்தை போற்றுவோம்.___________________________________________________
தளப் பக்கங்கள்
தமிழ் வளர்ச்சி தொல் தமிழ் நாகரிகம் நாட்சியம் ஒலிக் கட்டமைப்பு மூதாதையர்