திராவிட இனம்
திராவிட இனம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் முழவதுமாக பரந்து வாழ்ந்த ஆதிக்குடி மக்களின் இனம். அது உருவ அமைப்பை வைத்து எளிதில் இனம் காணக்கூடிய ஒரு இனம். திராவிட இனம் மரபணு வகைப்படுத்துதலின்படி இனம் கண்டு அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மரபினம். திராவிடம் எனும் சொல் ஒரு மொழிக் குடம்த்தையும் அந்த மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளைப் பேசும் மக்களையும் குறிக்கும் சொல். போல் திராவிட மொழிகள் பிறந்தவை என்று மேற்கத்திய மொழியிலாளர்கள் கருதுகின்றனர்.
தமிழர்கள் அந்த திராவிட மூலமொழி தமிழ் தான் என்னும் நம்பிக்கை கொண்டவர்கள்.
தமிழ் => திரமிள => திரமிட => திரவிட என்று ‘தமிழ்’ என்கிற சொல்தான் வடக்கே உள்ளவர்கள் சொல்லும்பொழுது திரிந்து ‘திராவிடம்’ ஆனது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் ‘திராவிடம்’ என்னும் சொல்லுக்கு பதிலாக ‘தமிழ்’ என்கிற சொல்லையே பயன்படுத்தலாமா என்று கேட்டால் அது தவறு. ஒரு சொல் பிறப்பது எப்படி இருந்தாலும் அது பயன்பாட்டால் அடையும் பொருள் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். ‘திராவிடம்’ எனும் சொல் தமிழ் ஒலிக்கட்டமைப்புக்கு பொருந்தாமல் அது ஒரு வேற்றுமொழிச்சொல் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தாலும் ‘திராவிடம்’ அல்லது ‘திராவிடர்’ என்னும் சொல்லை ‘தமிழ்’, ‘தமிழர்’ என்பதைக் கொண்டு இன்று நிறப்ப முடியாது.
இன்று ‘திராவிடர்’ எனும் சொல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட தமிழிலிருந்து பிரிந்த பிறமொழி பேசும் மக்களையும் உள்ளடக்கும் ஒரு சொல்லாகப் பொருள் தருகிறது. ‘பஞ்ச திராவிடர்’ அல்லது ‘பஞ்ச திராவிட பிராமணர்’ என்று குறிப்பிடுவது வடக்கே உள்ள பிராமணர்களிடம் இருந்து தெற்கே உள்ள பிராமணர்களை வேறுபடுத்தி காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட சொல்லாடல். அதற்கு தெற்கு பகுதியில் வாழும் அல்லது திராவிட நிலப்பரப்பில் வாழும் பிராமணர்கள் என்று பொருள். இங்கு திராவிடம் என்கிற சொல் தெற்கு அல்லது திராவிட மக்கள் வாழும் நிலப்பகுதி என்று பொருள் தருகிறது.
திராவிட இனம் என்று கூறும்போது அது ஒரு மரபினத்தைக் குறிக்கிறது.
திராவிட இயக்கம் என்று சொல்லும்போது அது ஒரு சமூக-அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. திராவிட இயக்கம் ஒட்டுமொத்தமாக திராவிட மரபின மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் பாடுபட்டது. அதனால் அரசியல் சார்ந்த பயன்பாட்டில் திராவிடம் எனும் சொல் திராவிட இயக்கத்தின் சாதனைகளையும் தாக்கத்தையும் உணர்த்தும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் மொழிக்குடும்பம் அதாவது திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள பிறமொழிகள் பேசும் மக்கள் சில நூற்றாண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரை தமிழ் பேசி தமிழினமாக இருந்தவர்கள்தான். ஆனால் இன்று வேறு மொழி பேசுவதால் வேறு மொழியினமாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் உருவ அமைப்பு, நிறம் போன்றவை மாறாது. ஆக மொழியினம் என்பது மரபினத்தின் உட்பிரிவு என்பதும், அது மிக சமீபகால மாற்றம் என்பது திண்ணம். ஆனால் மரபினம் என்பது உருவ அமைப்பு நிறம் போன்றவைகளால் எளிதில் அடையாளம் காணும் வகையில் இருக்கும்.
ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் வட இந்தியர்களின் பண்பாட்டு தாக்குதல் மற்றும் அரசியல் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே மரபினமாக ஒன்று திரளப் பயன்படுத்தப்பட்டதே ‘திராவிடர்’ எனும் மரபின அடையாளம். இன்றும் அதே சூழல்தான் நிலவுகிறது என்பதால் ‘திராவடர்’ எனும் மரபின அடையாளமும் நமக்கு தேவையான ஒன்றுதான். மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு அரசியல் அதிகாரம் அந்தந்த மொழியினத்தின் கையில் அவர்களது அதிகாரம் என்று வந்த பிறகு மொழியின அடையாளமாகிய ‘தமிழன்’ எனும் அடையாளம் இன்று நமக்கு அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது. பிற திராவிட மொழிகள் பேசும் மக்கள் நம்முடன் திராவிடராக இணையும்போது நாம் திராவிடராக இருப்போம். அவர்கள் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று அவர்களது மொழியின அடையாளத்தை முன்னிறுத்தும்போது நாமும் ‘தமிழன்’ எனும் மொழியின அடையாளத்தை முன்னிறுத்துவோம்.
மனிதனை மரபியல் வழியாக இனம் பிரிப்பதும் அதைப்பற்றி பேசுவதும் இனவாதமா?
யாவரும் கேளிர் என்று மனித குலத்திலுள்ள அனைவரும் உறவினரே என்று பார்த்தான் தமிழன். இன்று அறிவியலும் மனித குலம் ஒன்று என்றுதான் கூறுகிறது. பிறகு திராவிடன் என்று மரபணு வழியாக இனப்படுத்துதல் சரியானதா? இது இனவாதமா? – எனும் வினா எழலாம். மனிதனை கூறுபடுத்தி ஏற்ற இறக்கங்களைப் பாராட்டுவதுதான் இனவாதம். மனிதனில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. மனிதனை இனம்பிரித்து இது உயர்ந்த இனம் இது தாழ்ந்த இனம் என்று வகைப்படுத்துதலும், தன் இனம் அல்லது ஒரு இனம் ஆகச்சிறந்த இனம் என்று பெருமை பாராட்டுவதும், இன்னொரு இனம்பற்றி இழிவான மனநிலை கொள்வதுமே இனவாதம். நான் கருப்பாக இருக்கிறேன் வேறு இனத்தைச்சேர்ந்தவன் சிவப்பாக அல்லது மஞ்சளாக இருக்கிறான். இது தவிர உயரம், முடி, உருவ அமைப்பு ஆகிய அனைத்தும் ஒரு மனிதனைத் தோற்றத்தை வைத்து இனம் காணும் அளவுக்கு ஒரு இனத்திற்கு இனம் மாறுபட்டிருக்கிறது. மனித குலத்தின் ஒற்றுமையை நிலைநாட்டவும் மனிதனில் உள்ள ஏற்றதாழ்வுகளைக் களைவதற்காகவும் இனத்திற்கு இனம் உள்ள உருவ மாறுபாட்டை புறக்கணித்து மனிதனில் இனப்பாகுபாடு இல்லை என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு இணையாகும்.
நாம் தமிழினத்தையும் அதை உள்ளடக்கிய திராவிட மரபினத்தையும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று கூறுகிறோம். அறிவியல் என்னக் கூறுகிறது என்றால் மனித இனம் ஓரிடத்தில் தோன்றி அது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது, அதனால் எல்லோரும் இடம் பெயர்ந்தவர்கள்தான் என்றும், அதில் பலரும் ஏற்றுக்கொண்ட கூற்று என்னவென்றால் மனித இனம் ஆப்பிரக்க கண்டத்தில் தோன்றி அது உலகில் பல பகுதிகளுக்கு சென்று குடியேறியது எனபதாகும். அறிவியல் பூர்வமாக இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. அதிக பட்சம் தமிழர்கள் வைக்கும் மாற்றுக் கருத்து என்னவென்றால் அது இந்தியா அல்லது கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் உருவாகி மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது என்பதுதான். இரண்டு கருத்தும் பல வினாக்களை எழுப்பவல்லது. எல்லோரும் இங்கு தோன்றி இடம் பெயர்ந்தவர்கள் என்றால் எல்லோரும் இந்த மண்ணின் மக்கள் தானே. இதில் ஒரு இனத்தைப் பார்த்து இன்னொரு இனம் குடிபெயர்ந்து வந்தவர்கள் என்று கூறுவது எந்த அடிப்படையில்? எல்லோரும் ஆப்பிரிக்காவில் தோன்றி இடம் பெயர்ந்திருந்தால் முதலில் வந்தவனும் குடிபெயர்ந்து வந்தவன் தானே, அவன் எப்படி மண்ணின் மைந்தனாவான் என்பதுதான்.
மண்ணின் மைந்தன்
மனித இனம் தோன்றி 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை ஆண்டுகள் ஆகிறது என்று அறிவியல் கூறுகிறது. அவன் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து ஏறத்தாழ 1 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை ஆண்டுகள் ஆகிறது. பரிணாம மாற்றம் குறிப்பிடத்தகுந்த அளவு ஏற்பட்டு இன்னொரு இனமாக மாறுவதற்கு லட்சக்கணக்கில் ஆண்டுகள் ஆகிறது. மனித இனம் ஆப்பரிக்காவில் தோன்றினாலும் இந்தியாவுக்கு வந்து லட்சத்திற்கு மேலான ஆண்டுகள் ஆகிறது. இங்கு வந்த மனிதன் இந்த மண்ணின் தட்பவெப்பம், மண்ணின் தன்மை, அதில் அடங்கிய நுண்ணுயிர்கள், இவற்றை தாக்குப் பிடிக்கும் உயிரினங்கள், இவை அனைத்துடனும் போராடி அதற்கேற்றாற்போல் பரிணாம மாற்றம் அடைந்து நிறம், முடி, உயரம், உறுப்புகள், அங்கம், அவையம் அனத்தும் இந்த மண்ணில் தாக்குப்பிடித்து வாழும்படியாக மாறி, இந்த மண்ணைச் சார்ந்த பிற உயிரினங்களைப் போலவே இந்த மண்ணை விட்டு அகன்று உலகின் வேறு பகுதிகளுக்குச் சென்றால் உயிர்விடும் அளவுக்கு இந்த மண்ணோடு இணைந்து பரிணமித்ததால் இந்த மண்ணின் மைந்தனாகிறான். இதே போல் ஒவ்வொரு பகுதியிலும் லட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழும் மக்களும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றாற்போல் பரிணமித்து பிறரிலிருந்து எளிதில் பிரித்து இனம் கண்டுபிடிக்கும் அளவுக்கு பரிணாம மாற்றம் அடைந்து அந்தந்த மண்ணின் மைந்தர்கள் ஆகிறார்கள். வரலாற்றுக் காலகட்டத்தில் குழு ஒருங்கிணைப்பு, அறிவு வளர்ச்சி மற்றும் அறிவுத் தொடர்ச்சியின் நீட்சியாக அமைந்த பண்பாட்டு முறைகள் மூலம் உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் தாக்குப்பிடித்து வாழும் அளவுக்கு மனிதன் வளர்ந்த பிறகே உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயறத் தொடங்கினார்கள். ஒரு மண்ணைச் சார்ந்த மக்கள் பிற பகுதிகளுக்கு குடியேறும்போது அந்த பகுதியின் மண்ணின் மைந்தர்களிடம் இருந்து அனைத்து விதமான எதிர்ப்பும் நெருக்கடியும் சந்திக்க நேரிடும். இது இயல்பான ஒன்றே. அதையும் தாக்குப்படித்து அந்த மக்களுடன் கலந்தோ தனித்தோ உலகின் பல பகுதிகளில் பிறப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து நிலைகொண்டார்கள்.
திராவிட இனம் இந்திய துணைக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்கள் என்பது நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அகழாய்வுள் மூலமும் மரபணுக்கூறு ஆரய்ச்சி மூலமும் மெய்ப்பிற்கப்பட்ட ஒன்று.
தமிழினம் எனும் மொழியினம்
வரலாற்றுக் காலகட்டத்தில் ஒரு மரபினம் பல மொழியினங்களாகப் பிரிந்து பல தேசிய இனங்களாக உருவெடுத்தன. பல மொழியினங்களைக் கொண்டதுதான் திராவடர் எனும் மரபினம். தமிழினமும் அதில் ஒரு மொழியினம். திராவிடர் எனும் மரபினத்திலுள்ள ஒவ்வொரு மொழியினமும் தனக்கென ஒரு பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கி அதைப் போற்றி பாதுகாக்கிறது. தமிழினமும் திராவிட மரபினத்திற்குள் தனது தனி அடையாளத்தை தக்கவைத்து பாதுகாப்பதன் மூலம் திராவிட மரபினத்தைக் காப்பாற்றியது. தென்னிந்தியாவிலுள்ள திராவிட மரபினக் குடும்பத்தின் ஒவ்வொரு மொழியினமும் தத்தம் இனத்தின் தனித்தன்மையை காப்பாற்றி வந்ததன் மூலம் திராவிட மரபினம் இன்றுவரை தனது தனித்தன்மையை தக்கவைத்துள்ளது. வடஇந்தியாவிலுள்ள திராவிட மரபினத்தவர் மொழியின அடையாளம் இழந்ததால் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
திராவிட மரபினமோ தமிழ் மொழியினமோ பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றா?
மரபினத்தைப் பாதுகாப்பதோ, மொழியினத்தைப் பாதுகாப்பதோ இன்றைய சூழலில் ஏற்புடையதுதானா எனும் கேள்வி எழுவது இயல்பு. இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இனத்திற்குள் திருமணம் நடக்க வேண்டும். இனத்திற்குள்தான் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினால் அது இன்றைய தலைமுறையினருக்கு இனவெறிபோல் தோன்றும். அது உண்மையா என்று நாம் பார்க்க வேண்டும். பாலீர்ப்பே திருமணங்களின் அடிப்படை. பாலீர்ப்பால் இனக்கலப்பு மணங்கள் நடப்பது மனிதகுலம் ஒன்று என்பதற்கான எடுத்துக்காட்டு; அது மனித மாண்பை மேம்படுத்த வல்லது; அது போற்றுதலுக்குறியது. ஆனால் இன்று அதைத் தாண்டி பணம், பதவி, அதிகாரம், பகட்டு, படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஈர்ப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் கலப்பின மணங்கள் எந்த அடிப்படையில் மனித சமத்துவத்தை நிலைநாட்டுவதாக கோர முடியும்? ஒருவனுக்கு தன் இனத்தின் நிறம், தோற்றம் ஆகியவற்றின் மேல் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால் அதற்கு காரணம் ஆதிக்க வர்கத்தின் இனவழி துன்புறுத்தலே. அத்தகைய தாழ்வு மனப்பான்மையால் பிற இனங்களின் மேல் தோற்ற ஈர்ப்பு ஏற்பட்டால் அதுவும் இயல்பான பாலீர்ப்பு ஆகாது, மாறாக அது ஒரு இனத்தின் ஆதிக்காத்தால் ஏற்படும் பிறழ்ச்சி.
இனக் கலப்புத் திருமணம் மூலம் உருவாகும் கலப்பின வாரிசுகள் சிலர் தங்கள் இனப்பற்று, விசுவாசம், அடையாளம் ஆகியவற்றைப் பங்கு போட்டு இரு இனங்களுக்கும் காட்டுவார்கள். சிலர் ஏதாவது ஒரு பக்கம் சாய்வார்கள். அவர்களுடைய வாரிசுகள் எந்தப்பக்கம் நிற்பார்கள் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை. சில தலைமுறை முன் இனக்கலப்பு ஏற்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகள் இனத்திற்குள் திருமணம் நடந்தால் முன் ஏற்பட்ட கலப்பு மறந்து இனத்திற்குள் முழுவதுமாக சேர்க்கப்படுது இயல்பு.
புலம்பெயர்த் தமிழன் சந்ததியினர் எதிர்கொள்ளும் சிக்கல்
தமிழகத் (ஈழம் உட்பட) தமிழனுக்கு இல்லாத, புலம்பெயர் தமிழன் எதிர்கொள்ளும் சிக்கல் என்னவென்றால் அங்கு மணங்கள் மூலம் இனக்கலப்பு அதிகம், தமிழகத்தில் மணங்களின் மூலம் ஏற்படும் இனக்கலப்பின் வாய்ப்பு குறைவு. ஒரே மரபினத்தைச் சேர்ந்த பிற மொழியனத்தின் கலப்பு ஏற்படும்பொழுது அது சில தலைமுறைகளில் மறைந்துவிடுகிறது. ஒருவன் பிற மொழியினத்தைத் தாழ்வாக நினைக்காமல் தனது மொழியினத்தை உயர்வாகவும் பெருமையாகவும் நினைப்பதை நியாயப்படுத்த முடியும். ஏனென்றால் மொழியினம் பண்பாட்டு வாயிலானது. மொழியினம் மரபினத்தின் பிரிவு என்றாலும் அது மரபினத்தூய்மையை நேரடியாகப் போற்றாதது. மாற்று மரபினத்துடன் கலப்பு ஏற்படும்போது உருவமாற்றமும் ஏற்பட்டு எத்தனை தலைமுறை தாண்டினாலும் தன்னை யாராக அடையாளப்படுத்திக் கொள்வது என்கிற குழப்பத்தில் கலப்பின வாரிசுகள் ஒவ்வொருவரும் இருப்பதுண்டு. இனத்தூய்மை போற்றுவது மனிதத்திற்கு எதிரானது. ஆனால் இனவேறுபாடு மெய்மை. உருவ வேறுபாடு ஒருவனின் இனத்தை அடையாளம் காட்டுகிறது. தனது மரபின அடையாளத்தை ஒருவன் உயர்வாகவோ, பெருமையாக நினைப்பதும் இன்னொரு மரபினத்தைத் தாழ்வாக நினைப்பதும் இயற்கை நீதிக்குப் புறம்பானது, மனிதத்திற்கு எதிரானது. எல்லா இனமும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டியது என்பது திண்ணம். மனிதனுக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்பது எப்படி உண்மையோ அப்படி மனித இனங்களுக்குள் எந்த உயர்வு தாழ்வும் இல்லை. அதனால் எல்லா இனங்களும் ஒன்றாகக் கலந்து விடவேண்டும் என்கிற கொள்கைதான் சரியானது என்பதல்ல. இனக்கலப்பினால் ஏற்படும் நன்மைகள் குறித்து மரபணு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு இனமும் தங்கள் வசிப்படத்திற்கேற்ப பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்ததால் மரபணு மாற்றம் அடைந்து வாழும் சூழலில் தாக்குப்படிப்பதற்கு ஏற்றார்போல் உருவமாற்றம் உருப்பு மாற்றம் அவையம் மாற்றம் அடைந்து இன்று கொண்டிருக்கும் தனித்தன்மையும் மிகப் பெரியது. அதனால் ஒவ்வொரு இனமும் தங்கள் இனத்தின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்று விரும்பி ‘இனத்திற்குள் திருமணம்’ எனும் நிலைப்பாடு எடுத்தால் அதுவும் சரியானதே. தன்னுடைய இனம் இன்னொரு இனத்தைவிட உயர்வானது என்கிற மனப்பான்மை மட்டுமே தவறானது. தன்னுடைய இனமும் தன்னுடைய இனத்தின் புறத்தோற்றமும் இன்னொரு இனத்தை விட தாழ்வானது என்கிற மனப்பான்மை இழிவானது. இது போன்ற மனப்பான்மை மட்டுமே களையப்பட வேண்டும்.