தமிழ் ஒலிக் கட்டமைப்பு

முகப்பு Home       பின் செல்

தமிழ் ஒலிக் கட்டமைப்பு

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதன் மொழியை அழி என்கிறது ஒரு மேற்கத்திய கூற்று. ஒரு மொழியை அழிக்க வேண்டுமென்றால் அதன் ஒலிக்கட்டமைப்பை சிதைக்க வேண்டும். ஒலிக்கட்டமைப்பைச் சிதைத்து நெடுங்கணக்கை  மாற்றிவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும்தமிழை அழிக்கவேண்டும் என்றால் அதன் ஒலிக்கட்டமைப்பை மாற்றி அதன் நெடுங்கணக்கிற்குள் வேறு மொழிகளின் ஒலிகளைச் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் தமிழ் மொழி அழிந்து புது மொழிப் பிறந்து விடும். அந்த வேலையைத்தான் சமஸ்கிருதம் காலம் காலமாகச் செய்து வருகிறது.

ஒவ்வொரு மொழியும் மனிதனால் எழுப்பக்கூடிய ஒலிகளில் சிலவற்றையே எடுத்து தத்தம் ஒலிக் கட்டமைப்பை அமைத்து தமக்கான அரிச்சுவடியை வடிவமைக்கிறது. தமிழ் மொழியில் இயற்கையாக அமைந்த, இயல்பாக மனிதன் எழுப்பக்கூடிய ஒலிகளை வகைப்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தனது நெடுங்கணக்கை வகையமைத்து கொண்டுள்ளது. தொல்காப்பியம் அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஓசைக்கு முதன்மை கொடுத்து, தங்குதடையின்றி ஒலி ஓடை போல பாய்வதற்கு ஏதுவாக புணரியல் விதிகளை வகுத்து இசைக்கு உகந்ததாகவும் ஒலிக்கட்டமைப்பு செய்யப்பட்ட மொழி தமிழ் மொழி.  அதனால் வேறு மொழி சொற்களை தமிழில் பயன்படுத்தும்போது அச்சொற்களை தமிழின் ஒலிக் கட்டமைப்பிற்கேற்றாற்போல் மாற்றி பயன்படுத்தும்படி தொல்காப்பியம் விதித்துள்ளது.  தமிழ் இன்று வரை காப்பாற்றப்பட்டது இந்த விதியை நாம் கடைபிடித்ததால்தான்.  தமிழிலிருந்து பிற மொழிகள் பிறந்ததும் இந்த விதியை நமது சகோதரர்களால் பின்பற்ற முடியாமல் போனதால்தான்.

இந்த ஒலிக்கட்டமைப்பு தமிழுக்கு மட்டுமே உரிய ஒரு பண்பு அல்ல.  உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய ஒலிக்கட்டமைப்பை அமைத்து தத்தம் மொழிக்குரிய ஒலிநயம் குன்றிவிடாமல் பாதுகாக்கிறது.  ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகளில் அதற்கான விதிகள் எழுதப்படவில்லை என்றாலும் அந்த மொழிக்குரிய மக்கள் தங்கள் மொழியின் ஒலிநயத்தைக் காப்பர்.  வேறு மொழி சொற்களை உள்வாங்கிக் கொள்ளும்போது அதை தங்கள் மொழியின் ஒலிநயத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்வார்கள்.  வேறு மொழி சொற்களை அவர்கள் உச்சரிக்கும்போதே தங்கள் மொழியின் ஒலிநயத்திற்கேற்ப மாற்றித்தான் உச்சரிப்பர்.  இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் ‘தமிழ்’ ‘Tamil’ ஆனதுபோல் பல தமிழ் ஊர் பெயர்கள் ஆங்கில ஒலிநயத்திற்கு ஏற்றாற்போல் திரித்து ஆங்கில எழுத்து வடிவம் பெற்றது.

தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்றால் நாம் எந்த மொழியில் இருந்து சொற்களை எடுத்துக் கொண்டாலும் அதைத் தமிழ்படுத்தி அதாவது தமிழ் ஒலிக்கட்டமைப்பிற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு படிக்காத பாமரனிடம் ஒரு வேற்று மொழி ஒலி கொண்ட சொல்லை சொல்லி திரும்பச் சொல்லச் சொன்னால் அவன் இயல்பாக அதைத் தமிழ்படுத்தி அந்தச்சொல்லைச் சொல்வான். அது தொல்காப்பிய விதிகளுக்கும் உட்பட்டிருக்கும். ஒரு வடமொழி எழுத்தைக்கூட அவனால் சரியாக உச்சரிக்க முடியாது.  அவர்களுக்கு வடமொழி ஒலிகள் தமிழுக்கு பொருந்தாதது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள்.  ஆனால்  இன்று ஒரு பெரிய நெருக்கடியை தமிழர்களாகிய நாம் சந்தித்திருக்கிறோம்.  அந்த தலைமுறையினர் மறைந்து இப்பொழுது ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.  இவர்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒன்றிற்கு மேற்பட்ட சமஸ்கிருத எழுத்துக்கள் ஒட்டிக்கொண்டிருக்கும்.  தமிழின் ஒலிநயத்திற்கு ஒவ்வாத அந்த ஒலிகள் அவனுக்கு தன் பெயரின் மூலம் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.  தன் பெயரைக்கூட தன் மொழியால் சரியாக எழத முடியவில்லையே என்று ஆதங்கப்பட வைக்கிறது.  இந்த நிலைக்கு காரணம் என்ன என்று பார்ப்போம்.

சமஸ்கிருதம் ஒரு உன்னதமான மொழி என்று அம்மொழியைச் சார்ந்தோர்கள் கூறுகின்றனர்.  நமக்கு அதைப் பற்றிய கருத்து இல்லையென்றாலும் நாம் அதை மதிக்கிறோம்.  ஆனால் தமிழைப் பொருத்தமட்டில் சமஸ்கிருதம் ஒரு ஒட்டுண்ணியாகவே செயல்பட்டு வருகிறது.  தமிழனிடம் அந்த மொழி நேரடியாக ஒரு மொழியாக உள்ளே நுழையாமல் தமிழ் மொழி உள்ளே ஊடுருவி அதை சிதைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.  தமிழில் சமஸ்கிருத சொற்களை நுழைப்பது மட்டுமல்லாமல் சொல்லினுள் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சமஸ்கிருத எழுத்து நுழைந்துக் கொள்ளும். சமஸ்கிருதத்தின் ஸ, ஷ, ஜ, ஹ, ஆகிய நான்கு ஒலிகள்தான் தமிழை சிதைக்கும் ஆயுதங்களாக காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இடைக்காலத்தின் மணிப்பவள நடை ஏற்படுத்திய சேதமும் அதிலிருந்து தமிழ் மீண்டதும் நாம் அறிந்ததே.  தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி எந்த இயக்கமுறை அடிப்படையில் நடக்கிறது என்று பார்ப்போம்.  தமிழகத்தில் வாழும் சமஸ்கிருதத்தை தங்கள் மூதாதையர் மொழியாகக் கொண்ட மக்கள் தங்கள் அடையாளம் காக்கவும் தங்களது வடநாட்டுப் பங்காளிகளால் தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அல்லது தமிழ் மீதும் தமிழின் தொன்மை மீதும் இயல்பாகவே அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ தங்கள் பிள்ளைகளின் பெயர்களை சமஸ்கிருதப் பெயர்களாக வைத்தார்கள் (இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது).  சமூக அடுக்கில் மேல்தட்டில் உள்ள அவர்களிடம் அது ஒரு புதுநடையாக மாறியது.  ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு வேதங்களைத் தேடி அதில் உள்ள பழைய பெயர்களை பிள்ளைகளுக்குச் சூட்டி புதிய விளக்கங்களும் பரிமாறிக் கொண்டார்கள். அவர்களிடம் புதுநடையாக இருந்த இந்த போக்கு அவர்களை அடுத்துள்ள தமிழன்மாரில் உயர்தட்டிலுள்ள மக்கள் தங்கள் சமூக படிநிலையை தக்கவைத்துக் கொள்ள அதைப் பின்பற்றி சமஸ்கிருதப் பெயர்களை வைக்கத் துவங்கினார்கள்.  தமிழனில் இடைநிலையிலுள்ள மக்களும் அதைத் தொடர்ந்து அடிநிலையிலுள்ள மக்களும் சமூக படிநிலையில் தங்களை உயர்த்திக் கொள்ள உயர்தட்டிலுள்ள மக்களைப் பின்பற்றவதால், சமஸ்கிருத எழுத்துக்களைக் கொண்ட புது பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து தாங்களும் புதுநடை அறிந்த நாகரிகமானவர்கள்தான் என்று உறுதிப்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.  நாம் யாருக்காவது தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் வையுங்கள் என்று கூறினால் எத்தனை நூறு பெயர்கள் தமிழ் பெயர்கள் கூறினாலும் அவர்களுக்கு அது அழகாகத் தெரியாது.  ஸ, ஷ, ஜ, ஹ ஆகிய எழுத்துக்கள் கொண்ட பெயர்கள்தான் புதுமையாக, புதுநடையுடன் ஒத்துப்போகும்படி தெரியும். குறைந்தபட்சம் தமிழ் வதிகளை மீறிய ‘த்’ ல் முடிவடையும் அல்லது ‘ப்’ ல் தொடங்கக்கூடிய சமஸ்கிருத சாயல் கொண்ட பெயர்கள்தான் அழகாக தெரியும். இதைத் தவிர தமிழ் விதிகளுக்கு உட்பட்ட பெயர்கள் வைப்பதை உளவியல் சார்ந்த ஒருவித கூச்ச உணர்வு தடுக்கிறது.  கூச்ச உணர்வென்றால் இது சாதாரண கூச்ச உணர்வு அல்ல.  ஒவ்வொரு முறையும் தனது அல்லது தன் பிள்ளைகள் பெயரை பிறருக்கு சொல்லும்போது சமூக படிநிலையில் தனது தாழ்வுநிலை வெளிப்படும் கூச்சம்.   பெரும்பாலானத் தமிழன் தான் யாருக்காவது தாழ்ந்தவன் எனும் கூச்ச உணர்வால் உளவியல் வாயிலாக பாதிக்கப்பட்டுள்ளான்.  இதைத் தவிற்க ஒவ்வொரு தமிழனும் கூடுமான வரை அதிக வடமொழி ஒலிகளைக் கலந்து பெயர்களை வைத்து புதுநடை பின்பற்றி தனது தாழ்வு நிலையை மறைக்க முற்படுகிறான்.

தமிழனின் குலதெய்வ கோவில்களில் சில காலத்திற்கு முன்  ‘ஶ்ரீ’ எனும் பதம் மதிப்புக்கூட்டுப் பதமாக சேர்க்கப்பட்டது.  தமிழ் ஆர்வலர்கள் மிகவும் சிரமப்பட்டு விளக்கி ‘அருள்மிகு’ எனும் சொல்லைக் கொண்டு ‘ஶ்ரீ’ யை நீக்கினார்கள்.   தற்பொழுது அருள்மிகுக்கு முன்னால் ‘ஶ்ரீ’ யைப் போடத் துவங்கியுள்ளார்கள்.  ஆக இச்செயல் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் தமிழைச் சிதைக்க மேற்கொள்ளப்படும் சதி கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.  தமிழன் அதை உணராத பாமரனாக இருக்கிறான்.

வெளிநாட்டு மதங்களை பின்பற்ற எண்ணி அதற்காக பெயர் மாற்றம் செய்தவர்களும் ஸ, ஷ, ஜ, ஹ ஆகிய எழுத்துக்கள் துணையோடு அல்லது தமிழ் சொல்லமைப்பு விதிகளை மீறிதான் தங்கள் பெயர்களை எழுதமுடியும் என்னும் நிலையுள்ளது.  சமஸ்கிருதம், அரபி மொழி, ஆங்கிலம், பிரஞ்சி, டச்சு, போர்ச்சுகீசு போன்ற மொழிகள் அனைத்தும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்ததென்பதால் சமஸ்கிருத எழுத்து முறையான கிரந்த எழுத்தில் அவற்றை எழுதுவதற்கு ஓரளவு முடியம்.  அதனால் அந்த வகையிலும் கிரந்த எழுத்துக்கள் தமிழனின் பெயர்களில் நுழைந்துள்ளது.

இப்படியாக இன்றுள்ள தலைமுறையினரின் பெயர்கள் எல்லாவற்றிலும் சமஸ்கிருதம் நுழைந்துள்ளதால் இந்த தலைமுறையினருக்கு சமஸ்கிருத ஒலிகள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது.  இதன் விளைவு இந்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் தனது பெயரை தமிழில் எழுதமுடியாததை ஒரு குறைபாடாகப் பார்கிறான்.  இந்த காலம் பெரும்பான்மைவாத காலம் என்பதால் அடுத்த தலைமுறையினரிடம்  தமிழ் நெடுங்கணக்கை மாற்ற இங்கு ஊடுருவியவர்கள் முயற்சி செய்தால் அது எளிதில் வெற்றிப் பெறும்.

தமிழ் நெடுங்கணக்கு மாற்றப்படும் நாளே தமிழ் இறக்கும் நாள்.

இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் தமிழுணர்வுள்ள தமிழன்மார் அனைவரும் தமிழில் பெயர் வைப்பதை முன்னெடுத்து அதில் ஏற்படும் கூச்ச உணர்வை பாமர மக்களிடமிருந்து போக்கி அதை ஒரு புதுநடையாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.   தமிழ் ஒலிக்கட்டமைப்பிற்கு பொருந்தாத பெயர்களைக் கொண்டுள்ளவர்கள் புனைப்பெயர்களாக தங்களுக்குப் பிடித்த தமிழ் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பொதுவெளியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

 

முகப்பு Home    பின் செல்