தொல் தமிழ் நாகரிகம்

முகப்பு Home      பின் செல்

தொல் தமிழ் நாகரிக கருத்தியல்

தமிழின் தொன்மையும் தமிழ் நாகரிகத்தின் தொன்மையும் நம்மால் உணரமுடிந்த, நம் முன்னோர்கள் மூலம் நமக்குத் தெரியப்படுத்தப்பட்ட உண்மை.  ஆனால் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாம் இதுவரை போதுமான சான்றுகள் எடுத்துவைத்து தமிழ் மற்றும் தமிழனின் தொன்மையை பறைசாற்றவில்லை. இலக்கியச் சான்றுகள் நம்மிடம் போதுமான அளவு இருந்தாலும் அதற்கு வலுசேர்க்கும் தொல்பொருள் சான்றுகளை நாம் உலகின் முன் எடுத்து வைக்கவில்லை.  சிந்துவெளி போல் அழிந்த நாகரிகத்தின் சுவடுகள் எளிதில் மண்ணில் இருந்து தோண்டி எடுக்க முடியும். ஆனால் இடையூரில்லா தமிழ் நாகரிகத்தின் தொடர்ச்சியால் ஒரே இடத்தில் பல்வேறு ஏற்ற இறக்கத்துடன் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்ததால் பழங்காலத் தமிழனின் சுவடுகள் அழிக்கப்பட்டு அல்லது தற்கால குடியிருப்புகள்  கீழ் புதையுண்டு கிடக்கிறது. அது பற்றிய தேடல் ஒவ்வொரு தமிழுணர்வு கொண்ட தமிழனுக்கும் உண்டென்றாலும் அதற்கான வாய்ப்பு வசதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.  தொல் தமிழ் நாகரிகம் உலகத்தார் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிடினும் தமிழுணர்வு கொண்ட தமிழனிடம் அது ஒரு பெருமைமிகு கருத்தியலாகத் திகழ்கிறது. தொல் தமிழ் நாகரிக கருத்தியல் கீழ்கண்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

1.தமிழ் இந்தியத் துணைகண்டத்தில் தோன்றிய மொழிகளில் மூத்த மொழி. இடையூரில்லா மனித நாகரிகத்தின் தொடர்ச்சியினால் உருவான, இயற்கையாக பரிணமித்த மொழியே தமிழ்.

2. தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தும் தமிழிலிருந்து தோன்றியவையே.

3. தமிழ் நாகரிகம், ஈழம் உட்பட தென்னிந்தியா முழுவதையும் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நீண்ட நாகரிகத்தின் தொடர்ச்சி.

4. தமிழ் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வளர்ச்சி அடைந்து முழுமை பெற்ற ஒரு மொழி..

5. தமிழுக்கு வளர்ச்சி என்கிற பெயரில் மாற்றங்கள் செய்ய, சீர்திருத்தம் செய்ய, நெடுங்கணக்கை மாற்ற எந்த தேவையும் இல்லை. அதற்கு எவருக்கும் உரிமையும் இல்லை.

6. தமிழகத்தில் நேர்மையுடன் அகழாய்வு நடத்தினால் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் தொல் தமிழ் நாகரிகக் கருத்தியல் மெய்ப்பிக்கப்படும்.

தொல் தமிழ் நாகரிகம் பற்றி அறிய வேண்டுமென்றால் சங்க இலக்கியம், கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் அகழாய்வு ஆகியப் பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்த ஆய்வுகள் எல்லாம் தமிழ்நாட்டு அரசாங்க செலவில் ‘தமிழனால்’ அல்லது தமிழனுடைய மேற்பார்வையில் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். தமிழனல்லாதவரை (தமிழராக இருந்தாலும்) தமிழ் மண்ணில் ஆராய்ச்சி செய்ய அனுமதித்தால் அவர்கள் தங்கள் இன வரலாற்றை இங்கு தேடலாம் அல்லது தங்கள் இன வரலாற்று நம்பிக்கைகளுக்கு இடைஞ்சலாக தென்படும் தரவுகள் மறைக்கப்படலாம், விளைவாக வரலாறு திரிக்கப்படும்.

முகப்பு Home  பின் செல்