நாட்சியம்
– சொல்லாக்கத்தின் விளக்கம்
தேசியம் என்ற சொல்லுக்கு இணையான, ஆனால் பொருள் மாற்றம் கொண்ட மாற்றுச் சொல்லாக நாட்சியம் அமையும். நாட்சி அல்லது நாட்சியம் எனும் சொல்லாக்கம் ஆட்சி அதிகாரம், நாட்டின் எல்லை, இறையாண்மை இவை அனைத்தையும் கடந்து, ஒரு இனக்குழுவின் ஒருமித்த எண்ணோட்டம் அல்லது , அதன் நீண்ட நெடுந்தொடர்ச்சியால் அமைந்த ஒரு அடையாளத்தையும் குறிக்கும் சொல்லாக ஆக்கப்பட்டுள்ளது.
நாடு – ஆட்சி => நாட்சி => நாட்சியம்.
நாட்சியம் எனும் சொல் Nationalism எனும் ஆங்கிலச் சொல்லிற்கு நேரடித் தமிழாக்கம் இல்லை.
Nationalism (தேசியம்) அல்லது Nation (தேசம்) எனும் சொற்கள் மிக அண்மையில் ஐரோப்பிய நாடுகளால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சொற்கள். அதற்கு ஒரு முழுமையான வரையுரை இதுவரை இல்லை.
Nationalism (தேசியம்) தேசமும் நாடும் ஒருமித்த அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் தேசத்திற்கு வெளியிலிருந்து ஒரு அதிகாரத் தலையீடு இருக்கக்கூடாது என்பதையே மையப்பொருளாகக் கொண்ட ஒரு கருத்தியல்
தேசியம் அல்லது Nationalism எனும் சொல் நாடு எனும் அமைப்பையும் அதன் அதிகாரத்தையும் நிலைநிறுத்தவும், குடிமக்களைக் கட்டுக்கோப்புடனும் வைக்க நாடுகளால் பயன்படுத்தப்படும் சொல்.
நாடும் ஆட்சியும் தனிமனித அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஒரு இனம் (Race) என்பது ஒரே வம்சாவளியைச் சேர்ந்த மக்கள்.
ஒரு இனக்குழு (ethnic group) என்பது ஒரு இனம், பண்பாடு, மொழி, நாடு போன்றனவற்றால் இணைந்து குழு உணர்வோடு வாழும் மக்களின் குழு அடையாளம். நெடுங்காலமாக ஒரே வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் மக்களும் ஒரு இனக்குழு என்றும் கொள்ளலாம்.
நாட்சியம் என்பது ஒரு இனக்குழுவின் கூட்டு நினைவுணர்வு.
நாடும் ஆட்சியும் தனிமனித வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தோடு தனிமனிதனின் புறவாழ்வின் பொருளாக விளங்கும் மொழி, பொருளாதாரம், இயற்கை வளம், சூழல், பண்பாடு, வரலாற்றுத் தொடர்ச்சி, போன்ற இனத்தின் நலன் சார்ந்த ஒருமித்த எண்ணோட்டம் அல்லது இனக்குழுவின் , அதன் நீண்ட தொடர்ச்சியால் அமைந்த ஒரு அடையாளத்தையும் குறிக்கும் சொல்லாக நாட்சியம் எனும் சொல் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழன் இன்று பல தேசங்களில் வாழ்கிறான். பூர்வீகமாக, இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய இந்திய நாட்டில் ஒரு பகுதியும் இலங்கையில் ஒரு பகுதியும் கொண்டவனே தமிழன். இன்று தமிழன் உலகின் பல நாடுகளில் குடிமகன்களாக அந்தந்த நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு குடியேறிய நாடுகளில் நன்றிகூடிய நாட்டுப்பற்றுடன் ‘யாதுமூரே’ எனும் தமிழ் கோட்பாட்டிற்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கிறான். எந்த நாடும் தம்மக்கள் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், நிற்பந்திப்பதும் இயல்பே. சிறந்த குடிமகனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எவரும் இன்னொரு தேசியம் குறித்து பெருமிதம் கொள்வதோ அல்லது ஆதரிப்பதோ நெருடலானது அல்லது தேசவிரோதமானதாகக் கருதப்படுவதற்கு இடமளிக்கும் என்று கருதக்கூடும். அதனால் இன்னொரு நாட்டின் குடிமகன்களாக இருந்து கொண்டு தமிழ் தேசியம் குறித்து பேசுவதற்கு அல்லது தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கு பலர் தயங்குவார்கள். பல தேசிய இன மக்களைக் கொண்டதுதான் இந்தியா. ஆனால் இந்தியா இன்று ஒரே நாடாக இருக்கிற காரணத்தால் இந்தியர்கள் அனைவரும் இந்திய தேசத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்திய தேசத்தில் இருந்துகொண்டு தமிழ் தேசியம் பேசுவது இந்திய தேசத்திற்கு எதிரானது என்று சிலர் கருதுவதற்கு இடமுண்டு. ‘தேசியம்’ குடியுரிமையும் உள்ளடக்கியது என்பதால் சராசரி குடிமகன் தேசியத்தை குடியுரிமை உள்ள நாட்டிற்குத்தான் பயன்படுத்துகிறான். அதனால் எந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டும், அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தன் முழு நாட்டுப்பற்றையும் தான் சார்ந்த நாட்டிற்கு செலுத்தி, தாம் சார்ந்த நாட்டிற்கு எதிராக பேசுகிறோமா, இது சட்டவிரோதமோ அல்லது தேசவிரோதமோ என்கிற அச்சமின்றி தனது இனம் சார்ந்த உணர்வுகளால் இணைவதற்கு எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ‘தேசியம்’ எனும் சொல்லுக்கு இணையான ஒரு மாற்றுச் சொல்லின் தேவை எழுகிறது.
நாட்சியம் எனும் சொல் Nation எனும் ஆங்கிலச் சொல்லிற்கு நேரடித் தமிழாக்கமாக தென்பட்டாலும், தேசியம் அல்லது Nation எனும் சொல்லின் விரிவானப் பொருளில், எந்த நாடும் சட்டபூர்வமாக வரையறுக்கும் பொருள் நீங்கலாக உள்ள பொருள் இருப்பின் அதனையும், எந்த நாடும் சட்டபூர்வமாக வரையறுக்க இயலாத அதன் மட்டுமே நாட்சியம் எனும் சொல் அதன் பொருளாக கொள்கிறது. அதனால் ‘நாட்சியம்’ எனும் சொல் நாட்டுப்பற்று, குடியுரிமை, அரசியல் எல்லைகள், இறையாண்மை ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு சொல்லாகவும், மனித நேயம், இயற்கை நேயம், பண்பாடு, இலக்கியம், முன்னோர் வரலாற்றுப் பெருமிதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, இனவெறியையோ அல்லது எந்தவித வெறியையோ, வெறுப்புணர்வையோ, காழ்புணர்ச்சியையோ அல்லது தூண்டுதலையோ ஏற்படுத்தாத, வெறும் ஒரு இனக்குழுவின் உணர்விணைப்பை அடையாளப்படுத்தும் சொல்லாக விளங்கும்.